Posts

காப்பியத்தமிழ்

வாலி தன் மேல் பாய்ந்த அம்பைப் பிடுங்குதல் பகழி-அம்பு 312 சாம்எ னும்படி தெரிந்தது பலபடச் சலித்துஎன் உரம்எ னும்பதம் உயிரொடும் உருவிய ஒன்றைக் கரம்இ ரண்டினும் வாலினும் காலினும் கழற்றிப் பரமன் இன்னவள் பெயர்அறி குவள்எனப் பறிப்பான். தெளிவுரை:- வாலி, தன்மீது பாய்ந்தது அம்பு எளத் தெரிந்துவிட்ட பின்னர் அதனைக் கைப் பற்றிப் பலவாறு ஆய்ந்து கொண்டிருப்பதால் யாது பயன்? மார்பு என்கிற இடத்தைத் துளைத்து உயிர் கொள்கின்ற ஒப்பற்ற அந்த அம்பினை இரண்டு கைகளாலும் வாலாலும் இரண்டு கால்களாலும் வலிமையைப் பயன்படுத்திப் பறித்து இந்த அம்பினை எய்தவனான பெரியோனைப் பற்றி அறிய வேண்டும் என்னும் கருத்தினில் முனைந்தான். உரம் எனும் பதம் மார்பு என்கிற இடம். பரமன் தன்னுடைய வலிமையான தேகத்தில் ஊடுருவிப் பாயும் அளவு அம்பை வலிமையாகச் செலுத்தும் ஆற்றலுடையவனைக் கூறப்பட்ட சொல், ஏளனக் குறியால் இயம்புதலும் அமையும். 66